கொரோனா பேரிடர் காலத்தில் ஆவி பிடிப்பது சரியா ?
அறிவியல் பூர்வமான பகிர்வு
ஆவி பிடிப்பது எப்போது பலன் தரும் ?
இதுவரை எதற்கு நாம் ஆவி பிடித்தலை பயன்படுத்தி வந்திருக்கிறோம்?
நம்மில் பலரும் நமக்கு மூக்கடைப்பு ஏற்பட்டு மேல் சுவாசப்பாதை சளியால் அடைபட்டு இருக்கும் போது மூக்கின் மூலம் மூச்சு விட கஷ்டப்படுவோம்.
அப்போது மூக்கில் உள்ள சளியை ஓரளவுக்கு மேல் நீக்கி மூச்சு விட இயலாது
அப்போது மேல் சுவாசப்பாதை தொற்று நிலையில் (UPPER RESPIRATORY TRACT INFECTION) வீட்டில் தாய்மார்கள்
நன்றாக தண்ணீரை கொதிக்க வைத்து அதில் மூலிகை தைலங்கள்/ ஈக்வலிப்டஸ் தைலம் போன்றவற்றை போட்டு வேது பிடிக்கக்கூறுவார்கள்.
மூக்கடைப்பு சரியாகும்.
இன்னும் காது மூக்கு தொண்டை நிபுணர்கள் கூட சைனஸ் எனும் முகத்தில் உள்ள காற்றறைகளின் வாயில்களில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றில் சளி சேர்ந்து அடைத்துக்கொள்ளும்.
அந்த நிலையை சைனசைடிஸ்( sinusitis)என்போம்.
இந்த நிலையிலும் நீராவியை மூக்கின் வழி பிடிப்பது அந்த அடைப்புகளை ஓரளவு சரி செய்து தலைவலியில் இருந்து நிவாரணம் வழங்கவல்லது.
எனவே, வேது பிடித்தல் / ஆவி பிடித்தல் போன்றவற்றை சைனசைடிஸ் மற்றும் மேல் சுவாசப்பாதை தொற்றுகளில் மட்டுமே அறிகுறிகள் சரியாவதற்காக பயன்படுத்தி வருகிறோம்
ஆனால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கோவிட்-19 தொற்று கண்ட நபர்களுக்கு
மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தென்படுகின்றன
இந்த நாட்களில் அவரவர் விருப்பப்படி வீட்டுத் தனிமையில் இருப்பவர்கள் மூக்கடைப்பு சரி செய்யும் நோக்கத்தில் அந்த அறிகுறியை சரி செய்வதற்காக வேது பிடிக்கின்றனர்.
ஆனால் அதையே கொரோனா வைரஸை இந்த வேது பிடிப்பதால் கொன்று விட முடியும் என்று நம்பி வீட்டிலேயே வேது மட்டும் பிடித்துக்கொண்டு அறிகுறிகளை துச்சம் செய்து காலத்தை தாழ்த்தினால் அது தவறாகும்
ஏனென்றால் ஆவி பிடிப்பதால் தொண்டையிலோ மேல் நாசியிலோ பாரா நாசல் சைனஸ்களிலோ உள்ள வைரஸ்களை கொல்ல இயலாது என்பதை உணர வேண்டும்.
மேலும் நோய் தொற்று நிலை அடுத்த நிலைக்கு முற்றவதையும் வேது பிடிப்பதால் நிறுத்த முடியாது.
இன்னும் சொல்லப்போனால்
சாதாரண கொரோனா( MILD) நிலையில் இருந்து மிதமான கொரோனா நிலைக்கு (MODERATE ) செல்லுமானால் நோயாளியின் நுரையீரலில் “நியுமோனியா” ஏற்பட ஆரம்பிக்கிறது
இந்த நிலையில் மென்மேலும் சூடு அதிகமான நீரையோ எண்ணெய்கள் கலந்த நீரையோ வைத்து வேது பிடிப்பது என்பது
ஏற்கனவே கொரோனா நியூமோனியாவால் வெந்த நுரையீரலில் வேலைப் பாய்ச்சுவது போல அமைந்து விடக்கூடும்.
கொரோனாவில் நடப்பது என்ன?
நுரையீரலில் அதீத உள்காயங்கள் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக நுரையீரல் காற்றை உள்வாங்கி ரத்தத்தில் ஆக்சிஜனேற்றம் செய்யும் நிலையை இழக்கும்.
இதில் உள்காயங்கள் மிகுந்து இருக்கும் நிலையில் சூடான காற்று அந்த காயங்களில் படுவது என்பது ஆபத்தான பக்கவிளைவுகளை மிதமான மற்றும் தீவிர கொரோனா நோயாளர்களுக்கு உருவாக்கி விடக்கூடும்.
எனவே மக்களே
தயவு செய்து ஆவி பிடித்தல் வேது பிடித்தலை கொரோனா பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கொண்டு முக்கியமான நேரத்தை வீட்டிலேயே கடத்தி
ஆபத்தான நிலையை அடைந்த பின் மருத்துவமனைக்கு சென்று அட்மிட் ஆகாதீர்கள்
வீட்டில் வேது பிடிப்பது மற்றும் ஆவி பிடிப்பதே அறிவியல் பூர்வமாக நோய் தொற்று முற்றுவதை தடுப்பதில் பலனளிக்காது எனும் போது
இந்த ஆவி பிடித்தலை வெளி இடங்களில் வைத்து நிறைய பேர் ஒரே இடத்தில் ஒரே ஆவி பிடிக்கும் இயந்திரம் மூலம் ஆவி பிடிப்பது என்பது கொரோனா தொற்று மிகவும் வீறு கொண்டு பரவும் நிலையை உருவாக்கும் அபாயம் உண்டு.
அந்த இயந்திரத்தை ஒரு கொரோனா நோயாளி பயன்படுத்தினால் அதற்கடுத்தபடியாக பயன்படுத்தும் பலருக்கும் தொற்று பரவும் நிலை உருவாகும்.
மேலும் வேது பிடித்ததும் தும்மல் இருமல் வரும்.
உடனே தொற்றடைந்த ஒருவர் அருகில் தும்முவது மூலம் நோயைப்பரப்புவார்
எனவே இது போன்ற அறிவியல் பூர்வமற்ற விசயங்களை பொதுவெளியில் செய்வது மிகவும் தவறு.
முடிவுரை
கொரோனா பெருந்தொற்று காலத்தில்
கொரோனா நோய் முற்றுவதையோ
ஆவி பிடிப்பதால் தவிர்க்க இயலாது
இன்னும் அதீத வெப்பமான காற்றினால் சுவாசப்பாதையில் காயம் ஏற்படலாம்.
கொதிக்கும் தண்ணீர் ஊற்றி தீக்காயங்கள் அதிகம் ஏற்படலாம்.
மூக்கடைப்பை சரிசெய்வது தவிர வேறு எந்த பெரிய நன்மையையும் கொரோனாவில் ஆவி பிடித்தல் செய்யும் என்று ஒரு போதும் நம்பாதீர்கள்.
நியூமோனியா தொற்று அடைந்த நிலையில் ஒருவர் ஆவி பிடிப்பது அவருக்கு ஊறு விளைவிக்கும் செயலாக அமையலாம்.
இப்படி வேது பிடித்துக்கொண்டு அது நம்மை காக்கும் என்று நம்பி முக்கியமான நேரத்தை வீட்டில் கழித்து விட்டு அதி தீவிர மூச்சுத்திணறல் நிலையை அடைந்த பின் மருத்துவமனைக்குச் சென்றால் மரணம் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம்
இத்தகைய அறிவியல் பூர்வ ஆதாரமற்ற செய்திகளை நம்பி பொது இடங்களில் தொற்றுப்பரவலை அதிகரிக்கும் ஆவி பிடித்தலை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்
இத்தகைய ஆவி பிடிக்கும் இயந்திரங்களை நிறுவி மனதால் மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணத்துடன் தன்னார்வலர்கள் பலர் களம் இறங்கியிருந்தாலும் இதனால் நோய் அதிகமாக பரவும் வாய்ப்பே அதிகமாக இருப்பதால் தயவு கூர்ந்து இதை உடனே நிறுத்தி விட்டு வேறு வகையான பெருந்தொற்று கால உதவிகளை மக்களுக்கு செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
விழித்துக்கொண்டோரெல்லாம்
பிழைத்துக்கொண்டார்
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
அறிவியல் ஆதாரங்கள்
1. https://www.bmj.com/content/347/bmj.f6041
2. https://www.lung.org/…/lun…/pneumonia/treatment-and-recovery